கலை, இலக்கிய, ஆன்மீக நீரோடையில் பயணிப்போம் வாருங்கள்

Friday, September 07, 2007

கந்தர் அனுபூதி - 8

ஆண்டவன் அடியாரை எப் பாடு பட்டேனும் ஆட்கொள்வான் என்பது இந்தப் பாடலில் விளங்குகிறது

திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
.. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.

திணியான மனோ சிலை என்பது கல் போன்ற நம் மனத்தை குறிக்கிறது. அத்தகைய கல்லில் அழகிய தாமரையாகிய (அணியார் அரவிந்தம்) உன் தாள் அரும்புகிறதே என்று வியக்கிறார் அருணகிரியார். முருகப் பெருமான் எப்படிப் பட்டவன் ? எனக்கு என்ன வேலை (பணி யா) என்று கேட்டு வள்ளியம்மையின் பதத்தை பணியும் காதல் கொண்டுள்ளவன். அப்படிப் பட்டவன் நம்மையும் ஒரு பொருட்டாக எண்ணி நம் மனத்திலும் கோவில் கொண்டுள்ளானே என்று வியந்ததே இப் பாடல்.

வள்ளி திருமணத்தின் உட்பொருளை கவனித்தால் பரமாத்மாவாகிய இறைவனை அடைய ஜீவாத்மாவாகிய வள்ளி தவமிருந்தாள். ஆண்டவன் அவளை ஆட்கொண்டு அருள் புரிந்தான். ஆக பக்குவப் பட்ட ஜீவாத்மாவை ஆண்டவனே வந்து ஆட்கொள்கிறான். அதற்காக எந்த செயலையும் செய்கிறான். கல்லாலும் வில்லாலும் பிரம்பாலும் அடி வாங்குவது தன் அடியார்க்காகவே அல்லவா. இப்படிப் பட்ட ஒன்றைக் குறிக்கவே வள்ளி பதம் பணியும் என்ற உதாரணத்தைக் கொடுக்கிறார். அப்படிப் பட்ட கந்தப் பெருமான் இந்த ஏழையின்பால் பெருங்கருணை கொண்டு கல்லைப் போலுள்ள என் உள்ளதிலும் கோவில் கொள்ளுவதென்றால் என்னெ அவன் சிறப்பு. அன்புக்கு அகப் படும் இறைவனின் அருளை வியப்பதே இந்தப் பாடல்.

Friday, August 24, 2007

எளியார்க்கு எளியோன் -II

எல்லாம் வல்லவனான இறைவன் எவ்வாறு மாணிக்கவாசகருக்காக வையை நதியை பெருக்கெடுத்து ஓடச் செய்தான் என்பதையும், அந்த வெள்ளத்தை அடைக்க வந்தி என்னும் மூதாட்டிக்கு உதவ கூலியாளாக வந்ததையும் பார்த்தோம். அவ்வாறு கூலியாக வந்த பெருமானைப் பார்த்து வந்தி முகம் மலர அவனை அழைத்து வைகை ஆற்றை அடைக்கும் பணிக்கு எனக்கு பதில் செல்வாயோ என கேட்டாள். இறைவனும் அதற்கு கூலி என்ன என்று கேட்க

பிட்டு இடுவேன் உனக்கு என்றான் அதற்கு இசைந்து பெரும் பசியால்
சுட்டிட நான் மிக மெலிந்தேன் சுவைப் பிட்டில் உதிர்ந்த எலாம்
இட்டிடுவாய் அது முந்தத் தின்று நான் இளைப்பாறிக்
கட்டிடு வேன் நின்னுடைய கரை என்றார் கரை இல்லார்.

நானோ பிட்டு செய்து வாழ்பவள் அதனாள் அந்த பிட்டையே உனக்கு கூலியாக தருகிறேன் என்றாள். அதற்கென்ன, உதிர்ந்த பிட்டை மட்டும் எனக்கு கொடுத்தால் போதும், அதைத் தின்று பின்பு சற்று இளைப்பாறி அப்பால் உன் கரையை கட்டித்தருகிறேன் என்றான் கரையில்லா அந்தக் கருணைக்கடல். அவ்வாறு அந்த பிட்டை உண்டு நேராக வைகைக் கரைக்கு விரைந்து வெள்ளம் அடைக்கும் பணியில் ஈடுபட்டார். பரஞ்சோதி முனிவர் அதை நகைச்சுவை கலந்து விளக்குவார்

வெட்டுவார் மண்ணை முடி மேல் வைப்பார் பாரம் எனக்
கொட்டுவார் குறைத்து எடுத்துக் கொடு போவார் சுமடு விழத்
தட்டுவார் சுமை இறக்கி எடுத்து அதனைத் தலை படியக்
கட்டுவார் உடன் சுமந்து கொடு போவார் கரை சொரிவார்

மண்ணை வெட்டி தலை மேல் வைத்ததும் அடடா ஒரே பாரமாக இருக்கிறதே என்று கொட்டுவாரம். குறைத்து எடுத்துக்கொண்ட மண்ணை கொட்டும் போது அவர் அணிந்த சும்மாடும் விழ அதை உதறிக் கட்டுவார். Time wasting tactics என்று நாம் இப்போது சொல்வதற்கு எடுத்துக் காட்டாக விளங்கினார். பெரும் வேலையச் செய்தார்போல் களைப்புற்று மீண்டும் வந்தியின் வீட்டிற்குச் சென்று பசி எடுக்கிறது மீண்டும் பிட்டு கிடைக்குமா என்று கேட்டு வாங்கி உண்பார். பின் கரைக்கு வந்து முன்பு போலவே தன் "வேலையைத்" தொடர்வார். இது வேலை செய்யும் மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கவே மன்னனிடம் முறையிட்டனர். ஏற்கெனவே நரி பரியானதால் கடுப்படைந்திருந்த மன்னன் வெகுண்டு வைகையை நோக்கி விரைந்தான்.

வள்ளல் தன் கோபம் கண்ட மாறு கோல் கையர் அஞ்சித்
தள்ளரும் சினத்தர் ஆகித் தடக்கை தொட்டு ஈர்த்துப் பற்றி
உள்ளடு புறம் கீழ் மேலாய் உயிர் தொடும் ஒளித்து நின்ற
கள் வனை இவன் தான் வந்தி ஆள் எனக் காட்டி நின்றார்

இந்த இருக்கான்யா இவன் தான் என்று மற்ற ஆட்கள் காட்டிக் கொடுக்க, பாண்டியனும்

கண்டனன் கனன்று வேந்தன் கையில் பொன் பிரம்பு வாங்கி
அண்டமும் அளவு இலாத உயிர்களும் ஆகம் ஆகக்
கொண்டவன் முதுகில் வீசிப் புடைத்தனன் கூடையோடு
மண் தனை உடைப்பில் கொட்டி மறைந்தனன் நிறைந்த சோதி.

பொன்பிரம்பினால் இறைவன் முதுகில் ஓங்கி அடித்தான். உடனே மண்ணை உடைப்பில் கொட்டு மறைந்தான் ஆண்டவன். ஆனால் அந்த அடியோ

பாண்டியன் முதுகில் பட்டது செழியன் பன்னியர் உடம்பினில் பட்டது
ஆண் தகை அமைச்சர் மேனி மெல் பட்டது அரசு இளம் குமரர் மேல் பட்டது
ஈண்டிய கழல் கால் வீரர் மேல் பட்டது இவுளி மேல் பட்டது பருமம்
பூண்ட வெம் கரிமேல் பட்டது எவ் உயிர்க்கும் போதன் மேல் பட்ட அத் தழும்பு

வானவர் மனிதர் நரகர் புள் விலங்கு மாசுணம் சிதல் எறும்பு ஆதி
ஆன பல் சரமும் மலை மரம் கொடி புல் ஆதி ஆம் அசரமும் பட்ட
ஊன் அடை கருவும் பட்டன தழும்போடு உதித்தன உயிர் இல் ஒவியமும் தான் அடி பட்ட சரா சர சடங்கள் தமக்கு உயிர் ஆயினோன் தழும்பு

ஏக நாயகன் எவ் உயிர்களும் தானே என்பதும் அன்பினுக்கு எளியன்
ஆகிய திறனும் காட்டுவான் அடி பட்டு அங்கு ஒரு கூடை மண் கொட்டி வேக நீர் சுருங்கக் கரையினை உயர்த்தி மிகுத்து உடன் வேலை நீத்து ஒளித்துப்
போகிய வாறு கண்டு கோல் கையர் போய் நரையாட்டியைத் தொடர்ந்தார்

உலகில்லுள்ள உயிர்கள் எல்லாவற்றின் மேலும் அந்த அடி விழுந்தது. உலக உயிர்கள் எல்லாவற்றிலும் இறைவன் உறைகிறான் என்பதை இது தெளிவாக காட்டுகிறதல்லவா. இறைவனின் ஒரு கூடை மண்ணால் வெள்ளமும் உடனே அடங்கிற்று. உண்மையை உணர்ந்த மன்னன் ஆலயத்தில் சென்று இறைவனை வேண்டி நிற்க, அசரீரீ மூலமாக பெருமான் தாம் செய்த திருவிளையாடல்களே இவை என்று கூறி மணிவாசகரின் பெருமையைக் கூறி அவரை விடுதலை செய்யப் பணித்தான். மன்னனும் அவர் காலில் வீழ்ந்து வணங்கி அவரை அமைச்சராக தொடர வேண்டினான். அவர் என்பணி இனிமேல் இறைப் பணி, நான் தில்லை யாத்திரை செல்கிறேன் என்று மன்னனிடம் விடை பெற்றார்.

இத்தகைய திருநாள் தான் மதுரையில் நேற்றும் இன்றும் பிட்டுத்திருநாளாகக் கொண்டாடப் படுகிறது. இந்த நாளில் உதிர்ந்த்த பிட்டைச் செய்து இறைவனுக்குப் படைத்து அடியார்க்கும் அளித்து உண்ணுவர். அடியார்க்காக் இறைவன் எதுவும் செய்யத் தயங்கமாட்டான் என்பதை இந்த அற்புத திருவிளையாடல் உணர்த்துகிறது.

Wednesday, August 22, 2007

எளியார்க்கு எளியோன்

இன்று ஆவணி மூலத் திருநாள். மதுரையிலே சிறப்பாக கொண்டாடப் படுகிற ஆவணித் திருவிழாவின் சிகரம் வைத்தது போல் இந் நாள் கொண்டாடப் படும். இறைவன் அடியார்களுக்காக எந்த அளவிற்கும் இறங்கிவரத் தயங்க மாட்டான் என்பதை இந்நாள் உணர்த்துகிறது.

மதுரையில் அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர் மணிவாசகர். குதிரைகளை வாங்க மன்னன் அளித்த பணத்தை அவர் இறைவன் கோவில் கட்ட செலவழித்தார். இதை யாரோ அரிமர்த்தன பாண்டியனுக்கு 'போட்டுக் கொடுக்க' அவன் மாணிக்க வாசகரை உடனடியாக குதிரையோடு வரச் சொன்னான். இறைவனும் அவருக்காக பக்கத்துக் காட்டில் இருந்த நரிகளை குதிரைகளாக மாற்றிக் கொடுத்தான். அந்தப் போலிக் குதிரைகளை மன்னனிடம் ஒப்படைத்து விட்டு நல்லவேளை இனிமேல் 'சிவனே' என்று இருக்கலாம் என்று நினைத்த அவரை விதி விடவில்லை.

மன்னனின் லாயத்தில் கட்டப் பட்ட அந்தக் குதிரைகள் எல்லாம் இரவோடு இரவாக மீண்டும் நரிகளாக மாறி அங்கே இருந்த நிஜக் குதிரைகளை கடித்துக் குதறிவிட்டு காட்டுக்கு ஓடி விட்டன. பரஞ்சோதி முனிவர் இதை திருவிளையாடல் புராணத்தில்

கள் ஒழுக்கு தார் மீனவன் கடி மனை புகுந்த
புள்ளுவ அப் பரி நள் இருள் போது வந்து எய்தப்
பிள்ளை ஆகிய மதி முடிப் பிரான் விளை யாட்டால்
உள்ளவாறு தம் வடிவு எடுத்து ஒன்றொடு ஒன்று சாவும்.

நாடிக் காவலன் தமர் உளார் நகர் உளார் கண்டால்
சாடிக் காய்வரே புலரும் முன் சங்கிலித் தொடர் நீத்து
ஓடிப் போவதே சூழ்ச்சி என்று ஊக்கம் உற்று ஒருங்கே
கூடிப் பேசின ஊளை வாய்க் குறு நரிக் குழாங்கள்

ஊளை ஓசை கேட்டு இம் என உறக்கம் நீத்து எழுந்து
காளை வீரராம் மந்துரை காப்பவர் நெரு நல்
ஆளி போல் வரு பரி எலாம் நரிகளாய் மற்றை
ஒளி மா நிரை குடர் பறித்து உண்பன கண்டார்

என்று விவரிக்கிறார். கோபத்தில் கொதித்த மன்னன் அமைச்சரை அழைத்தான். அவரும் வெள்ளந்தியாய் என்ன விஷயம் என்று கேட்க

குற்றம் ஏது அப் புரவிக்கு எனக் கேட்டார் கோமகனும் குற்ற மேதும் அற்றத்தால் அரை இரவில் நரியாகி அயல் நின்ற புரவி எல்லாம்
செற்றுவார் குருதி உக நிணம் சிதறக் குடர் பிடுங்கித்தின்று நேர்வந்து
உற்ற பேர்க்கு ஊற்றம் இழைத்து ஊர் கலங்க காட்டகத்தில் ஓடிற்று அன்றே

அவ்வளவுதான் என்று கூறி இக்குற்றத்தை செய்தமையால் அவரைச் சிறையில் அடைத்தான். சிறையில் அவர் இறைவனை வேண்ட, தம் அடியாரைக் காக்கும் பொருட்டு வைகையில் வெள்ளத்தை பெருக்கினான் இறைவன். அந்த வெள்ளத்தை அடைக்க முடியாமல் வீட்டுக்கு ஒருவர் வெள்ளத்தை அடைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று மன்னன் ஆணையிட்டான். மதுரையில் வசித்து வந்த வந்தி என்னும் மூதாட்டி பிட்டு செய்து விற்பதைத் தொழிலாகக் கொண்டவள். அவளுக்கு துணை யாரும் இல்லை. கூலிக்கும் ஆள் இல்லை. எனவே அரசன் தண்டனை வரும் என அஞ்சி ஆலவாய் அண்ணலிடம் முறையிட

பிட்டு விற்று உண்டு வாழும் பேதையேன் இடும்பை என்பது
எள் துணை யேனும் இன்றி இரவி எங்கு எழுகென்று இந் நாள்
மட்டு நின் அருளால் இங்கு வைகினேற்கு இன்று வந்து
விட்டது ஓர் இடையூறு ஐய மீனவன் ஆணை யாலே

தேவர்க்கும் அரியன் ஆகும் தேவனே அன்பர் ஆவார்
யாவர்க்கும் எளியன் ஆகும் ஈசனே வேந்தன் ஆணைக்
காவல் செங்கோலார் சீற்றம் கடுகுமுன் கூலி ஆளாய்
ஏவல் செய்வாரைக் காணேன் ஏழையேன் இனி என் செய்கேன்

என்று வேண்ட

எளியார்க்கு எளியனாய் விளங்கும் இறைவன்

அழுக்கு அடைந்த பழந்துணி ஒன்று அரைக்கு அசைத்து விழுத்தொண்டர் குழுக் கடந்த இண்டை நிகர் சுமை அடை மேல் கூடை கவிழ்த்து
எழுக் கடாந்து திசை கடந்திட்டு இணை கடந்த திருத்தோள் மேல் மழுக்கடைந்து விளங்கிய வாய் மண் தொடு திண் படை ஏந்தி.

ஆலு மறைச் சிரமுடியார் அடிக்கமலம் நிலம் சூடக்
கூலி கொடுத்து எனை வேலை கொள்வார் உண்டோ என்று என்று
ஓல மறைத் திருமொழி போல் உரை பரப்பிக் கலுழ் கண்ணீர்
வேலை இடைப் படிந்து அயர்வாள் வீதி இடத்து அணைகின்றார்

கூலிக்கு ஆள் வேண்டுமோ என்று கூவிக்கொண்டே புறப்பட்டான்.
(மேலும் அறிவோம்)

Tuesday, May 29, 2007

கந்தர் அனுபூதி - 7

அன்பர்களே,

இன்று வைகாசி விசாகப் பெருநாள். ஆறுமுகமும் பன்னிரு கையும் கொண்டு திருமுருகன் உலகம் உய்ய உதித்த நன்னாள். அவனை வணங்கி அனுபூதியின் அடுத்த பாடலை நோக்குவோம்.

மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகமாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.


மாய வடிவான சூரனையும் கிரவுஞ்ச மலையையும் அழித்த முருகன் புகழ் பாடும் அருணகிரியார் அடுத்து அந்த மாயையினால் உழலும் உயிர்கள் பற்றி இங்கு கூறுகிறார். இப்பாடலை நேரடியாகப் பொருள் கொண்டால் பெரும் மாயையைகளை அழிக்க வல்ல முருகப் பெருமான் தன் ஆறு முகங்களாலும் உபதேசம் செய்தும் நான் அம் மாயையிலிருந்து வெளியேற முடியவில்லையே எனப் பொருள் படும். அவ்வாறு முருகப் பெருமானாலேயே வெல்ல முடியாத மாயை உண்டா என்ன ?.

கொஞ்சம் நுட்பமாக கவனித்துப் பார்த்தால் ஆறு என்பதற்கு 'வழி' என்ற பொருளின் படி (ஆற்றுப் படுத்துதல் கேள்விப் பட்டிருக்கிறோம் அல்லவா), அகம் அதாவது வீடு, மங்கைகள் என்று இந்த உலகத்தில் மீது பற்றும் பாசமும் வைக்கச் சொல்லும் மாயைகளை அழித்து தன்னிடம் ஆட்கொள்ளச் செய்யும் பல வழிகளை ஆண்டவன் படைத்திருக்கிறான். வேதங்கள், வேதாந்தங்கள், சாத்திரங்கள், துதிப் பாடல்கள் என்று இறைவனிடம் இட்டுச் செல்லும் பலவகையான வழிகளை மறந்து விட்டு உலக மக்கள் மாயையில் சிக்கித் தவிப்பது ஏன் என்று அருணகிரியார் மனம் இரங்குவது இந்தப் பாடலில் வெளிப் படுகிறது.

Thursday, March 01, 2007

கந்தர் அனுபூதி - 6

அனுபூதியின் அடுத்த பாடலைப் பார்க்கலாம்


வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே

ஆண்டவனிடம் சரணடைகின்ற அனுபூதியை விளக்கமாக கூறுகிறது இப் பாடல். மானிடராய் பிறந்தவரெல்லாம் பந்த பாசத்தால் கட்டுண்டு இறைவனை மறந்த வாழ்க்கை இந்தப் பூமியில் வாழத்தகாது என்பதை 'மனைவி (வளைபட்ட மாதர்) மற்றும் மக்கள் என்ற தளை' என்று கூறுகிறார். வாழ்க்கைத் துணையும் மக்களும் நல்லோராக அமைந்தால் வாழ்க்கை இனிக்கும், இல்லாவிடில் பெரும் சுமையாக, கை விலங்காக மாறிவிடும். அப்படி ஒரு வாழ்க்கை என்னும் விலங்கில் அகப் பட்டு அழிவது தகுமோ தகுமோ என்று வேலனிடம் முறையிடுகிறார். சிறுத்தொண்ட நாயனார் கதை பலருக்கு தெரிந்திருக்கும். அவர் வீட்டுக்கு வந்த விருந்தினர் பிள்ளைக் கறி வேண்டும், அதுவும் தாய் பிடிக்க தந்தை அவனை அரித்து கறி சமைக்க வேண்டும் என்று கேட்டார். இதற்கு அவர் மனைவியும் மகன் சீராளனும் ஒப்புக் கொண்டனர். அதன் படியே கறி சமைத்து அடியாருக்கு உணவாக அளிக்கம, இறைவனருளால் அவன் திரும்ப உயிருடன் வந்தான் என்பது புராணம். அப்படிப் பட்ட மனைவி, மக்களைப் பெறும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. ஆதலால் வாழ்க்கைத் தளையில் பட்டு துன்பப் படுகிறோம். இத்தகைய துன்பத்திலிருந்து நம்மை விடுவிக்க வல்லவன் கந்தனே அல்லவா.

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு விதமாக முருகப் பெருமானைப் புகழும் அருணகிரியார் இப்பாடலில் (கிளைபட்டு) தன் சுற்றம் சூழ போருக்கு வந்த சூரனின் உரமும் , அவனை வெல்வதற்கு முதல் தடையாக அமைந்த கிரௌஞ்ச மலையையும் துளைத்துப் புகுந்த வேலவனே என்று பாடுகிறார். கிரௌஞ்ச மலை தாரகாசுரன் ஆட்சிபுரிந்த மாயாபுரிக்கு காவலாக இருந்தது. ஒரு அசுரனே கிரௌஞ்ச மலையாக இருந்து கொண்டு அதன் வழியாக செல்கிறவர்களை பல குகைகள், பிலங்களூடே செல்லச் செய்து குழப்பி அவர்களை கொன்றுவிடுவான். முருகப் பெருமானின் சேனையையே அவன் அவ்வாறு மயக்கி சிறைப்பிடிக்க, தன் வேலால் அந்த மலையை அழித்த விதத்தை கந்தபுராணம் சொல்லும். அதேபோல மாயையின் மகனும் மாயையே வடிவானவனுமான சூரபன்மன் உரத்தையும் வேல் தான் அழித்தது. எனவே பந்த பாசம் என்னும் மாயையை அழிக்க, மாய வடிவான கிரௌஞ்சத்தையும் சூரபன்மனையும் அழித்த வேலவனின் உதவியை அருணகிரியார் நாடுகிறார்.

மாயையை பற்றி இன்னும் பேசுகிறார் அனுபூதியின் அடுத்த பாடலில் .....

Tuesday, November 14, 2006

கந்தர் அனுபூதி - 5

வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே !

அனுபூதியின் இந்தப் பாடலில் அருணகிரியார் முருகப் பெருமானது தன்மையை உணர்த்துகிறார்.

ஆறுமுகப் பெருமான் யார் என்று வினவி முதலில் அவர் பஞ்ச பூதங்களில் ஒருவரோ என்று ஐயுறுகிறார். வானமோ, நீரோ, நிலமோ, நெருப்போ இல்லை காற்றோ என்று முதலில் கேட்டு பின் தெளிந்து பிறகு ஒரு வேளை ஞானம் தோன்றும் இடமோ என்று கேட்கிறார். அதை விலக்கி ஒருவேளை நான்கு வேதங்கள் என்பது முருகப் பெருமான் தானோ என்கிறார். அதையும் விடுத்து இப்படியெல்லாம் கேட்கத் தூண்டும் நான் என்ற எண்ணம்தான் ஆறுமுகப் பெருமானோ இல்லை உள்ளிருந்து ஆட்டுவிக்கும் மனம் தானோ என்று ஆராய்கிறார். பின்பு ஒருவேளை எனை ஆட்கொண்ட இடம்தானோ என்று கேட்டு நிறைவு செய்கிறார்.

இந்தப் பாடல் பந்த பாசங்களை அறுத்து எய்யும் யோக நிலையை உணர்த்துகிறது. எல்லா இடத்திலும் தேடினேன் பின்பு என்னிடத்தில் கண்டுகொண்டேன் என்னும் பொருளை அற்புதமாக கேள்வி பதில் பாணியில் விளக்கியிருக்கிறார் அருணகிரியார். மேலும் இந்தப் பாடலில் அக்காலத்தில் நிலவிய மதங்கள் பலவற்றையும் மறைமுகமாக ஆய்வு செய்வது போல் குறிப்பிடுகிறார். பஞ்சபூதங்களை கும்பிடும் வகையில் தொடங்கி, ஞானமே உயர்ந்தது என்னும் பொளத்த மதம், பின் வேதங்கள் மூலம் கடவுளை அடையலாம் என்னும் பூர்வ மீமாம்ச மதம், யானோ தான் அதுவோ என்று கூறும் ஆத்ம வாதம் போன்றவைகளை ஆராய்ந்து எனை ஆட்கொண்ட இடம் தானோ என்று கூறுவதன் மூலம் அவனை மனத்தில் நிறுத்தி எண்ணினால் அவனே வந்து ஆட்கொள்வான் என உணர்த்துகிறார் அருணகிரிப் பெருமான்

Thursday, October 05, 2006

கந்தர் அனுபூதி - 4

கந்தர் அனுபூதியின் இரண்டாவது பாடலில்

உல்லாச, நிராகுல, யோக விதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே

என்று வேண்டுகிறார்.

முதலில் முருகப் பெருமானை, உல்லாச மன நிலை உடையவன், துன்பம் என்பதே இல்லாதவன், யோக நிலையில் உள்ளவன் என்று போற்றும் அருணகிரியார், தான் பெற்ற எல்லாம் துறந்து, தன்னையே இழந்த நிலையை சொல்லாயோ என்று இறைஞ்சுகிறார். யாரிடம் கூறச் சொல்கிறார், முருகன் அடியார்களிடம். சல்லாப விநோதனே என்று கூறுவதன் மூலம், அடியார்களிடம் இனிமையாக பேசி திருவிளையாடல் புரிபவனே, நீ தான் அவர்களிடம் இதைக் கூற வேண்டும் என்கிறார்.

இதன் மூலம், யான் பெற்ற இந்த இன்பத்தை எல்லாரும் பெற வேண்டும் என்ற அவரின் உயரிய கோட்பாடு வெளிப் படுகிறது. அது மட்டும் இல்லாமல், இதை அவரே சொன்னால் என்ன?, ஏன் பெருமானை அழைத்து சொல்லச் சொல்கிறார் என்ற கேள்வி எழாமல் இல்லை. யோக சாதனை என்பது சாதாரணமானதன்று, அதில் ஈடுபடுவதே கடினம். அதனினும் கடினம் அதில் உணர்ந்ததை அடுத்தவர்க்கு எடுத்துச் சொல்வது. யோக நிலையை அடைந்து உலகத்தை விட்டு ஒதுங்கி நிற்பது பெரிய விஷயமில்லை. உலகத்தோடு ஒத்து வாழ்ந்து அதே சமயம் தாமரை இலைத் தண்ணீர் போல பற்று அற்று இருப்பதே சிறப்பு. இப்படி இருப்பவர்கள் சொற்பமே. எனவே இத்தகைய தகுதிகளெல்லாம் எவனுக்கு உரியனவோ அந்த ஆறுமுகக் கடவுள் சொல்வதே தகும் எனக் கருதி பெருமானிடம் வேண்டுகிறார்.

அனுபூதியின் மிக உயர்ந்த நிலையை இப்பாடல் நமக்கு உணர்த்துகிறது.