கலை, இலக்கிய, ஆன்மீக நீரோடையில் பயணிப்போம் வாருங்கள்

Saturday, September 30, 2006

ஸரஸ்வதி துதி

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை
தூய உருப்பளிங்கு போல் வளென் உள்ளத்தின்
உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்

இன்று ஸரஸ்வதி பூஜை. இந் நன்னாளில் நமக்கு என்றும் அழியாத கல்விச் செல்வத்தை அளித்த அன்னையை வழிபடுவோம் வாருங்கள். தூய்மையின் உருவமாக அவள் நமக்குத் துணை இருக்கும் போது நமக்கேன் வரும் இடர்.

Friday, September 29, 2006

குருமொழி - 1

ஒருநாள் குருவை ஒரு சீடன் அணுகி சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க முற்பட்டான். ஆனால் அவனுக்கு வார்த்தைகள் கிடைக்காமல் திணரவே குருவே அவனுக்கு உதவ முற்பட்டு உரையாடலை தொடங்கினார்.

குரு : உன்னுடைய வேதாந்த பாடங்கள் எல்லாம் எந்த அளவில் இருக்கின்றது
சீடன் : அது அவ்வப்போது தொடர்ந்து கொண்டு இருக்கிறது குருவே

குரு : உன்னுடைய பாடத்தின் போது உனக்கு சந்தேகங்கள் வரும் என்று நினைக்கிறேன்
சீடன் : ஆம் குருவே
குரு : அதில் ஒரு சந்தேகத்தை கூறி அதை தீர்ப்பதற்கு எவ்வாறு முயற்சி செய்தாய் என்பதையும் தெரிவிக்க முடியுமா?
சீடன் : என் மனத்தில் அடிக்கடி தோன்றும் ஒரு சந்தேகத்தை தீர்க்க முயற்சி செய்தேன். முடியவில்லை. தங்களிடம் தெரிவிக்கவே வந்தேன்.

குரு : சரி சொல்
சீடன் : அது விதிக்கும் மதிக்கும் இடையே ஆன போராட்டம் தான். இதை எப்படி தீர்ப்பது
குரு : ம். இது பெரிய மாகான்களுக்கும் சோதனை தரக்கூடிய ஒன்றுதான், நீ கூறியபடி இதை தெரிவித்தால்.
சீடன் : நான் கூறியதில் தவறு இருக்கிறதா ?

குரு : ஆம்
சீடன் : எப்படி
குரு : போராட்டம் என்பது இரண்டு வேறுபட்டவைகளுக்குள் தோன்றுவது. இரண்டும் வேறுபடாவிட்டால் போராட்டம் ஏது
சீடன் : சரி. இங்கே தான் விதி ..நம் மதி என்று இரண்டு இருக்கின்றனவே
குரு : சரியாகச் சொன்னாய். இப்படி அதை இரண்டு என்று வகைப்படுத்துவாதால் தான் சிக்கல் ஏற்படுகிறது
சீடன் : அவை தனித்தனி என்று நான் உணருகிறேன் அல்லவா, அப்படி இருக்கும் போது நான் எப்படி தவறாக வகைப்படுத்துவேன்
குரு : நம் தர்மத்தில் கூறிய படி விதி என்பது வெளியில் இருந்து வருவதல்ல. உன்னுடைய கடந்த கால செயல்களின் பலன் தான் அது. அது கடவுளால் விதிக்கப்பட்டது அல்ல உன்னாலேயே தோற்றுவிக்கப் பட்டது. மதி என்று கூறுவது நீ இப்போது செயல் படும் விதம்

சீடன் : இன்னும் அவை எப்படி வேறு வேறு அல்ல என்று எனக்கு விளங்கவில்லை
குரு : விதி என்பது பழைய செயல்களால் ஏற்பட்டது. மதி யால் புதிய செயல்களைச் செய்கிறோம். இரண்டும் ஒன்றே. அதாவது நம் செயல். அவை காலத்தால் வேறு பட்டாலும் கருத்தால் ஒன்றேயாகும்
சீடன் : ஆனால் காலத்தால் ஏற்படும் வேறுபாட்டை நாம் ஒதுக்கித் தள்ள முடியுமா. கடந்த கால விதிக்கும் இப்போதுள்ள மதிக்கும் ஏற்படும் போராட்டத்தில் எது வெல்லும்.

குரு : ஒதுக்கித் தள்ள வேண்டியது இல்லை. ஆனால் அதை ஊன்றிக் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது நடப்பது உன் முன் இருக்கிறது. உன் மதியால் அதை மாற்ற முயற்சிக்கலாம். ஆனால் கடந்தவை கடந்தவையே. அதை உன்னால் பார்க்க இயலாது. ஆகையால் அதன் வலிமையை உணர்ந்து கொள்ள இயலாது. இரண்டு குஸ்தி பயில்வான்களைப் பார்த்து அவர்களில் ஒருவருக்கு பயிற்சி இருக்கிறது, ஒருவருக்கு வலிமை இருக்கிறது, ஒருவர் பல போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை வைத்து அவர் வெற்றி பெறலாம் என்று அனுமானிக்கத் தான் முடியுமே தவிர அவர்தான் வெற்றி பெறுவார் என்று அறுதிட்டுக் கூற முடியாது. அவர்கள் இருவரும் சண்டையிடும் போது தான் யார் வெற்றி பெறுவார் என்று தெரியும். ஆதலால் விதி / மதிக்கு இடையான போராட்டம் என்று நீ கூறுவது அது ஏற்படும் போது தான் நமக்குத் தெரியுமே அன்றி, விவாதித்து எது பெரியது என்று கூற முடியாது.

ஆக போராட்டத்துக்கு முன் அதன் தீர்வை சொல்ல இயலாது. போராட்டம் முடிந்த பின் தீர்வைக் கண்டுபிடித்து உபயோகம் இல்லை. எனவே விதி / மதி பற்றி ஆராய்ச்சி செய்வது வீண்.

சீடன் : குருவே ..நம் விதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிடச் சொல்கிறீர்களா

குரு மெல்லச் சிரித்தார்

(தொடர்வோம்)

Thursday, September 28, 2006

கந்தர் அனுபூதி - 3

அனுபூதியின் முதற் பாடல்


ஆடும் பரி வேல் அணி சேவல் எனப்

பாடும் பணியே பணியா அருள்வாய்

தேடும் கயமா முகனைச் செருவில்

சாடும் தனியானை சகோதரனே


இப்பாடலை கயமாமுகனைச் செருவில் சாடும் தனி யானை சகோதரனே, ஆடும் பரி வேல் அணி சேவல் என பாடும் பணியே பணியா அருள் வாய் என்று கொள்ளலாம்.


இறைவனைப் பாடும் வேதங்கள், பாசுரங்கள், பதிகங்கள் எல்லாவற்றிர்கும் ஆதாரமாக விளங்குவது ஓம் என்னும் பிரணவமேயாகும். ஓம் என்னும் சப்தமே பிரபஞ்சத்தின் ஆதியில் இருந்தது எனக் கூறுவார். அதைப் பிரித்தால் 'அ' காரமாகவும் 'உ' காரமாகவும் 'ம' காரமாகவும் பிரியும். அ உ ம் சேர்ந்ததே ஓம் ஆகும். அருணகிரியார் இந்தப் பிரணவத்திலிருந்தே தனது அனுபூதியைத் தொடங்குகிறார். 'ஆடும்' என்ற சொல்லின் மூலம் அ கார, உ கார ம காரங்களைக் கையாண்டு முருகப் பெருமானின் வாகனமான மயிலைப் குறிப்பிடுகிறார். அதுவும் எப்படி, ஆடும் மயில் என்று சொன்னால், அச் சொற்கள் சேர்ந்து ஆடு மயில் என்றாகிவிடும். எனவே மயிலைக் குறிக்கும் இன்னோரு சொல்லான பரியைப் பயன் படுத்தி 'ம' காரம் மறைந்து போகாமல் பாடுகிறார்.


ஆக, மயிலையும், சேவலையும், சக்தி வேலையும் பாடும் பணி மட்டும் போதும் என இறைவனை வணங்கும் அவர், முருகப் பெருமானை கயமுகாசுரனை செருவில் வென்ற ஆனைமுகன் சகோதரனே என்று வழிபடுகிறார். விநாயகப் பெருமானை வணங்கி தொடங்கிய அவர் இந்தப் பாடலிலும் அவரைக் குறிப்பிடுகிறார். கயமுகனை விநாயகர் வென்று ஆட்கொண்டார். மூஞ்சூரு வடிவில் தனது பாத கமலங்களில் அவனை வைத்துள்ளார். ஆகவே தமது மோசமான குணங்களை விட்டு இறைவனை வழிபட்டால் அவன் நம்மை ஆட் கொள்வான் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

Wednesday, September 27, 2006

கந்தர் அனுபூதி - 2

காப்பு

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்

இதை கொஞ்சம் எளிமையாகப் பார்த்தால் நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருக, தஞ்சத் தருள் சண்முகனுக்கு, இயல் சேர் செஞ்சொற் புனைமாலை சிறந்திட பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம் என்று கொள்ளலாம்.

தனது அனுபூதியை காப்புச் செய்யுளுடன் தொடங்கும் அருணகிரியார் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்குகிறார். தன்னிடத்தில் அடைக்கலம் என்று வந்தவர்களை காக்கும் கடவுளாம் சண்முகப் பெருமானுக்கு, சம்சார பந்தம் என்னும் சூழலில் தத்தளித்து கல் போன்ற நெஞ்சத்தை உடையவர்களையும் நெகிழ்ந்து உருகச் செய்ய வல்ல தமிழ் இலக்கணம் வழுவாது மாலைகளால் ஆன செய்யுளை படைக்க வேண்டும் என்றும், அதற்கு அந்த ஆனைமுகன் அருள் வேண்டும் என்றும் வணங்குகிறார்.

திருப்புகழிலும் சரி மற்ற பாடல்களிலும் சரி ஆனைமுகனை அருணகிரியார் பெரிதும் போற்றுவதைக் காணலாம். விநாயகப் பெருமானை வணங்கி ஒரு செயலைத் தொடங்கி விட்டால் அதற்குப் பிறகு எல்லாமே வெற்றிதானே

கந்தர் அனுபூதி - 1

முருகனின் புகழ் பாடும் பல நூல்களில் கந்தர் அனுபூதி முக்கியமான ஒன்று. அதை அளித்த அருணகிரியாரின் வரலாறு நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். சுருக்கமாக கூறின், முருகனால் ஆட்கொள்ளப் பட்டு திருப்புகழ் என்ற காவியத்தை முருகன் தலங்கள்தோறும் சென்று பாடியருளினார் அருணகிரியார். அவர் மீது உள்ள பொறாமையால் சம்பந்தாண்டான் என்னும் காளி உபாசகர் அவருக்கு பல துன்பங்களைக் கொடுத்தான். முருகன் அருளால் அத்தனையையும் அவர் வென்றார். இந்த நிலையில் அரசனுக்கு கண் பார்வை போயிற்று. சம்பந்தாண்டான் அரசனிடம், தேவ லோகத்தில் இருந்து பாரிஜாத மலர் கொண்டுவந்தால் பார்வை திரும்பவும் கிடைக்கும் என்று தெரிவித்தான். அரசன் வேண்டுகோளின் படி அருணகிரியார் தேவ லோகம் சென்று பாரிஜாத மலர் எடுத்து வர இசைந்தார். ஆனால் மனித உடம்போடு செல்ல முடியாத தால் ஒரு கிளியின் உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்து தேவலோகம் சென்று அந்த மலரை எடுத்து வந்தார். இதற்குள் சம்பந்தாண்டானும் அவனுடைய ஆட்களும் அவருடைய உடம்பைக் கண்டுபிடித்து அழித்து விட்டனர். மலரைக் கொண்டுவந்து அரசனுக்கு பார்வை வந்தாலும், தன் பழைய உடலுக்குச் செல்ல முடியாத அருணகிரியார், கிளி உருவாக திருவண்ணாமலை கோபுரத்தில் அமர்ந்து முருகனைப் பாடி இயற்றிய 51 பாடல்களே கந்தர் அனுபூதி. திருவண்ணாமலையில் அந்த கோபுரம் 'கிளிக் கோபுரம்' என்று அழைக்கப் படுகிறது.

இனி இந்த அனுபூதியில் வரும் பாடல்களைப் பார்ப்போம்

Tuesday, September 19, 2006

விநாயகர் வணக்கம்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே

முழுமுதற் கடவுளாம் விநாயகரைத் தொழுதே எல்லா செயல்களும் தொடங்கப்படுகின்றன. எல்லாப் பிரிவினராலும் வணங்கப் படுபவர் விநாயகர். பிள்ளையார் என்று பிரியமுடன் அழைக்கப் படும் அந்த ஐந்து கரத்தை உடையவரை, யானைமுகம் கொண்டவரை, சந்திரனின் பிறைபோன்ற தந்தம் கொண்டவரை, ஞான வடிவானவரை நாம் சிந்தையில் வைத்து போற்றுவோம்.