கலை, இலக்கிய, ஆன்மீக நீரோடையில் பயணிப்போம் வாருங்கள்

Friday, September 07, 2007

கந்தர் அனுபூதி - 8

ஆண்டவன் அடியாரை எப் பாடு பட்டேனும் ஆட்கொள்வான் என்பது இந்தப் பாடலில் விளங்குகிறது

திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
.. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.

திணியான மனோ சிலை என்பது கல் போன்ற நம் மனத்தை குறிக்கிறது. அத்தகைய கல்லில் அழகிய தாமரையாகிய (அணியார் அரவிந்தம்) உன் தாள் அரும்புகிறதே என்று வியக்கிறார் அருணகிரியார். முருகப் பெருமான் எப்படிப் பட்டவன் ? எனக்கு என்ன வேலை (பணி யா) என்று கேட்டு வள்ளியம்மையின் பதத்தை பணியும் காதல் கொண்டுள்ளவன். அப்படிப் பட்டவன் நம்மையும் ஒரு பொருட்டாக எண்ணி நம் மனத்திலும் கோவில் கொண்டுள்ளானே என்று வியந்ததே இப் பாடல்.

வள்ளி திருமணத்தின் உட்பொருளை கவனித்தால் பரமாத்மாவாகிய இறைவனை அடைய ஜீவாத்மாவாகிய வள்ளி தவமிருந்தாள். ஆண்டவன் அவளை ஆட்கொண்டு அருள் புரிந்தான். ஆக பக்குவப் பட்ட ஜீவாத்மாவை ஆண்டவனே வந்து ஆட்கொள்கிறான். அதற்காக எந்த செயலையும் செய்கிறான். கல்லாலும் வில்லாலும் பிரம்பாலும் அடி வாங்குவது தன் அடியார்க்காகவே அல்லவா. இப்படிப் பட்ட ஒன்றைக் குறிக்கவே வள்ளி பதம் பணியும் என்ற உதாரணத்தைக் கொடுக்கிறார். அப்படிப் பட்ட கந்தப் பெருமான் இந்த ஏழையின்பால் பெருங்கருணை கொண்டு கல்லைப் போலுள்ள என் உள்ளதிலும் கோவில் கொள்ளுவதென்றால் என்னெ அவன் சிறப்பு. அன்புக்கு அகப் படும் இறைவனின் அருளை வியப்பதே இந்தப் பாடல்.

2 Comments:

Blogger G.Ragavan said...

அநுபூதியானது ஒவ்வொருவருவது நோக்கிலும் விதம்விதமான வாக்காக வருவதும் கதம்பமாக இருக்கிறது. :)

திணியான மனோசிலை மீது தாமரைப் பாதம் எப்படிப் பதியும்? அதான் கல்லாச்சே? அதுக்குத்தான் மொதல்லயே "நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து" உருகீர்ராரு. அப்புறம் அதுல தானாப் பாதம் பதிஞ்சிருது.

2:29 PM

 
Blogger பராசரன் said...

வருகைக்கு நன்றி ராகவன். நீங்கள் சொல்வதும் உண்மைதான் ;)

இப்படியும் யோசிக்கலாம் முருகன் அவரை ஆட்கொள்வதற்கு முன்பு கல்லாகத்தானே இருந்தது அவர் மனம். சும்மா இரு சொல்லற என்று சொல்லி தனது பாதத்தைப் பதித்த பின்னரே நெஞ்சக் கனகல் உருகியதல்லவா !

12:09 AM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home