கலை, இலக்கிய, ஆன்மீக நீரோடையில் பயணிப்போம் வாருங்கள்

Tuesday, November 14, 2006

கந்தர் அனுபூதி - 5

வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே !

அனுபூதியின் இந்தப் பாடலில் அருணகிரியார் முருகப் பெருமானது தன்மையை உணர்த்துகிறார்.

ஆறுமுகப் பெருமான் யார் என்று வினவி முதலில் அவர் பஞ்ச பூதங்களில் ஒருவரோ என்று ஐயுறுகிறார். வானமோ, நீரோ, நிலமோ, நெருப்போ இல்லை காற்றோ என்று முதலில் கேட்டு பின் தெளிந்து பிறகு ஒரு வேளை ஞானம் தோன்றும் இடமோ என்று கேட்கிறார். அதை விலக்கி ஒருவேளை நான்கு வேதங்கள் என்பது முருகப் பெருமான் தானோ என்கிறார். அதையும் விடுத்து இப்படியெல்லாம் கேட்கத் தூண்டும் நான் என்ற எண்ணம்தான் ஆறுமுகப் பெருமானோ இல்லை உள்ளிருந்து ஆட்டுவிக்கும் மனம் தானோ என்று ஆராய்கிறார். பின்பு ஒருவேளை எனை ஆட்கொண்ட இடம்தானோ என்று கேட்டு நிறைவு செய்கிறார்.

இந்தப் பாடல் பந்த பாசங்களை அறுத்து எய்யும் யோக நிலையை உணர்த்துகிறது. எல்லா இடத்திலும் தேடினேன் பின்பு என்னிடத்தில் கண்டுகொண்டேன் என்னும் பொருளை அற்புதமாக கேள்வி பதில் பாணியில் விளக்கியிருக்கிறார் அருணகிரியார். மேலும் இந்தப் பாடலில் அக்காலத்தில் நிலவிய மதங்கள் பலவற்றையும் மறைமுகமாக ஆய்வு செய்வது போல் குறிப்பிடுகிறார். பஞ்சபூதங்களை கும்பிடும் வகையில் தொடங்கி, ஞானமே உயர்ந்தது என்னும் பொளத்த மதம், பின் வேதங்கள் மூலம் கடவுளை அடையலாம் என்னும் பூர்வ மீமாம்ச மதம், யானோ தான் அதுவோ என்று கூறும் ஆத்ம வாதம் போன்றவைகளை ஆராய்ந்து எனை ஆட்கொண்ட இடம் தானோ என்று கூறுவதன் மூலம் அவனை மனத்தில் நிறுத்தி எண்ணினால் அவனே வந்து ஆட்கொள்வான் என உணர்த்துகிறார் அருணகிரிப் பெருமான்

4 Comments:

Blogger ஜயராமன் said...

பராசரன் ஐயா,

///எனை ஆட்கொண்ட இடம் தானோ என்று கூறுவதன் மூலம் அவனை மனத்தில் நிறுத்தி எண்ணினால் அவனே வந்து ஆட்கொள்வான் என உணர்த்துகிறார்///

சத்தியமாக புரியவில்லை. முருகனை ஆட்கொண்ட இடம் (அதாவது space) என்று சொல்கிறாரா?

இருந்தாலும் நன்றாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். எனக்குத்தான் விளங்கவில்லை.

நன்றி

3:40 AM

 
Blogger G.Ragavan said...

மிக அருமையான விளக்கம். கந்தரநுபூதியில் ஆழ ஆழ இன்பந்தான். கந்தரநுபூதிக்கு http://iniyathu.blogspot.com என்ற வலைத்தளத்தில் நானும் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நேரம் கிடைக்கையில் வந்து பார்க்கவும். நன்றி.

4:11 AM

 
Blogger rv said...

//பஞ்சபூதங்களை கும்பிடும் வகையில் தொடங்கி, ஞானமே உயர்ந்தது என்னும் பொளத்த மதம், பின் வேதங்கள் மூலம் கடவுளை அடையலாம் என்னும் பூர்வ மீமாம்ச மதம், யானோ தான் அதுவோ என்று கூறும் ஆத்ம வாதம் போன்றவைகளை ஆராய்ந்து எனை ஆட்கொண்ட இடம் தானோ என்று கூறுவதன் மூலம் //


அருமை..

மிகத் தெளிவாக எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள் பராசரன்.

5:17 AM

 
Blogger பராசரன் said...

ஜயராமன் அவர்களே,

எனை ஆண்ட இடம் என்று அவர் குறிப்பிடுவது 'நிலையை'. பிறப்பெடுக்கும் ஆன்மா பல நிலைகளைக் கடந்து இறைவனுடன் இரண்டறக் கலக்கிறது. அது அந்தப் பக்குவ நிலையை அடையும் போது இறைவனே வந்து ஆட்கொள்கிறான் என்பது அருணகிரியாரின் துணிபு. இதைத்தான் இங்கு அவர் குறிப்பிடுகிறார்.

கருத்துக்கு நன்றி. வரும் இழைகளில் இன்னும் விளக்கமாக எழுத முயற்சிக்கிறேன்

ராகவன்/ராமநாதன் : கருத்துக்கு நன்றி

9:21 PM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home