கந்தர் அனுபூதி - 4
கந்தர் அனுபூதியின் இரண்டாவது பாடலில்
உல்லாச, நிராகுல, யோக விதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே
என்று வேண்டுகிறார்.
முதலில் முருகப் பெருமானை, உல்லாச மன நிலை உடையவன், துன்பம் என்பதே இல்லாதவன், யோக நிலையில் உள்ளவன் என்று போற்றும் அருணகிரியார், தான் பெற்ற எல்லாம் துறந்து, தன்னையே இழந்த நிலையை சொல்லாயோ என்று இறைஞ்சுகிறார். யாரிடம் கூறச் சொல்கிறார், முருகன் அடியார்களிடம். சல்லாப விநோதனே என்று கூறுவதன் மூலம், அடியார்களிடம் இனிமையாக பேசி திருவிளையாடல் புரிபவனே, நீ தான் அவர்களிடம் இதைக் கூற வேண்டும் என்கிறார்.
இதன் மூலம், யான் பெற்ற இந்த இன்பத்தை எல்லாரும் பெற வேண்டும் என்ற அவரின் உயரிய கோட்பாடு வெளிப் படுகிறது. அது மட்டும் இல்லாமல், இதை அவரே சொன்னால் என்ன?, ஏன் பெருமானை அழைத்து சொல்லச் சொல்கிறார் என்ற கேள்வி எழாமல் இல்லை. யோக சாதனை என்பது சாதாரணமானதன்று, அதில் ஈடுபடுவதே கடினம். அதனினும் கடினம் அதில் உணர்ந்ததை அடுத்தவர்க்கு எடுத்துச் சொல்வது. யோக நிலையை அடைந்து உலகத்தை விட்டு ஒதுங்கி நிற்பது பெரிய விஷயமில்லை. உலகத்தோடு ஒத்து வாழ்ந்து அதே சமயம் தாமரை இலைத் தண்ணீர் போல பற்று அற்று இருப்பதே சிறப்பு. இப்படி இருப்பவர்கள் சொற்பமே. எனவே இத்தகைய தகுதிகளெல்லாம் எவனுக்கு உரியனவோ அந்த ஆறுமுகக் கடவுள் சொல்வதே தகும் எனக் கருதி பெருமானிடம் வேண்டுகிறார்.
அனுபூதியின் மிக உயர்ந்த நிலையை இப்பாடல் நமக்கு உணர்த்துகிறது.
1 Comments:
அருமையான, எளிமையான, அழகான விளக்கம்.
எவர் எழுதினாலும் மனம் உருகச் செய்யும் அருணையாரின் அழகு தமிழ்ச் சொற்கள்
நன்றி.
கூடவே திருப்புகழ் விளக்கத்தையும் படிக்குமாறு வேண்டிக்க் கொள்கிறேன்.
http://aaththigam.blogspot.com
7:47 AM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home